Search This Blog
Welcome to Chendursiddha blog. Siddha is a traditional system of medicine mainly followed in southern parts of India. More than a medicine "Siddha a way of life" .
Featured
- Get link
- X
- Other Apps
மூல நோய் – சித்த மருத்துவ வழிமுறை
“மலச்சிக்கல் அதனால் மனிதனுக்குப் பல சிக்கல்' என்ற மருத்துவமொழி ஒன்று உண்டு. அந்தச் சிக்கல்களில் முதன்மையான சிக்கலாக இருப்பது மூலநோய்.
“அனில தொந்தமலாது மூலம் வராது” பித்த என்பது சித்த மருத்துவத்தில் தேரையர் கூறிய பிணிகளுக்கான முதல் காரணம். அனிலம் என்பது வாதம் (அ) வாயு. நம் உணவுக்குடலில் சேரும் நாட்பட்ட வாயுவும் , சூட்டிற்கு காரணமான பித்தமும் ஒன்று கூடி மலக்குடலை தாக்கி வீக்கத்தை உண்டாக்கி மூல நோயை உண்டாக்கும் . மேலும் கழிவறையில் நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல், நாள்பட்ட வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல், உடல் பருமன், கர்ப்பம்,குறைந்த நார்ச்சத்துள்ள உணவு,முதுமை, உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, அதிக எண்ணெய் பசையுடன் சாப்பிடுவது போன்ற காரணிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்,கோபம்,கவலை, மனச்சோர்வு,அதிகரித்த பாலியல் ஆசை, உப்பு மற்றும் கசப்பான உணவுகளை அதிக அளவில் உட்கொள்ளுதல் ஆகியவை மூல நோயை உண்டாக்கும் காரணங்கள் ஆகும்.
குறிகுணங்கள் :
- ஆசனவாய் மற்றும் அதைச் சுற்றியும் வலிமிகுந்த கட்டிகள்.
- ஆசனவாய் சுற்றி அரிப்பு, எரிச்சல்.
- இரத்தம் கசிதல்.
- தலைவலி.
- மலச்சிக்கல் .
- இரத்த சோகை.
மூலநோயின் நிலைகள் :
·
ஸ்டேஜ் 1:வலியில்லாமல் ரத்தம் மட்டும் வெளியேறுவது.
·
ஸ்டேஜ் 2 :மலம் கழிக்கும்போது ரத்தத்தோடு சதையும் வெளியே வந்து, மலம் கழித்து முடித்தவுடன் ஆசனவாய்க்கு உள்ளே சதை தானாகச் சென்றுவிடுவது.
·
ஸ்டேஜ்3: ரத்தத்தோடு சதை வந்து, மலம் கழித்து முடித்தபின்னர் சதை தானாக உள்ளே செல்லாமல் அழுத்தம் கொடுத்து உள்ளே செலுத்துவது .
·
ஸ்டேஜ் 4: எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் சதை உள்ளே செல்லாமல் இருப்பது.
மூலநோய் ஆரம்பகட்டத்தில் ரத்தம் மட்டும்தான் வெளியேறும், வலி இருக்காது.
ஆனால் அடுத்தடுத்த கட்டங்களில் வலியும் உண்டாகும்.
மூல நோய் தவிர்க்கும் சில வழிமுறைகள் :
- “வாதமலாது மேனி கெடாது “ உடலில் வரும் அனைத்து பிணிகளுக்கும் வாயுவே முதன்மையான காரணம், அதனால் தான் சித்த மருத்துவத்தில் 6 மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து கொடுப்பது வழக்கம் . இது அதிகரித்த வாதத்தை தன்னிலைப்படுத்தும். பித்தத்தை குறைப்பதற்கு சித்த மருத்துவம் கூறிய எளிய வழிமுறை தான் “எண்ணெய் குளியல்“. அதனால் வாரம் 2 முறை சீரகம் சேர்த்து காய்ச்சிய நல்லெண்ணையை உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்து வெந்நீரில் குளிக்கவும்.
- மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- அதிகமான காரப்பொருட்களை நீக்க வேண்டும்.
- அதிகமான அளவில் தண்ணீர் பருக வேண்டும்.
- ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து இருப்பதை தவிர்க்க வேண்டும்.
- குறிப்பாக நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பதோடு தற்காலத்தில் அதிகமாக புழக்கத்திலுள்ள ரெக்ஸின் இருக்கைகளில் உட்காருவதை தவிர்க்க வேண்டும்.
மூல நோய்க்கான உள் மருந்துகள் :
- பிரண்டையை நெய்யில் வறுத்து உண்டால் மூல நோயில் உண்டாகும் ரத்த கசிவும், தினவும், எரிச்சலும் நீங்கும்.
- துத்தி இலை கொதிக்கவைத்த நீரில் பனைகற்கண்டு சேர்த்து குடித்து வரவும்.
- 3-5 சின்ன வெங்காயத்தை நெய்யில் வதக்கி தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
- மலம் கழிக்கும்போது உண்டாகும் ரத்தத்தைக் கட்டுப்படுத்த வாழைப்பூவை இடித்து, சாறெடுத்துக்குடிக்கலாம்.
- மாங்கொட்டையிலுள்ள பருப்பைத் தூளாக்கி, மோரில் கலந்து குடிக்கலாம்.
- கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கைத் தவிர மற்ற கிழங்குகளைச் சாப்பிடக் கூடாது.
- சுண்டைக்காயை சிற்றாமணக்கெண்ணெய் விட்டு வறுத்து உப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், இவைகளையும் சிறிது வறுத்துக் கூட்டி பொடித்து சோற்றுடன் கலந்து சாப்பிடவும் .
- மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் ஆமணக்கு எண்ணெயை தினமும் ஒரு டீஸ்பூன் இரவு தூங்குவதற்கு முன்பாக உட்கொள்ளலாம், ஆசனவாயிலும் தடவிக்கொள்ளலாம்.
மூல நோய்க்கான வெளிமருந்துகள் :
·
துத்தி இலையை ஆமணக்கு நெய்யால் வதக்கி மூலநோய் கட்டி, விரணம், முளைகள், கிருமி ஆகியவைகளின் மேல் வைத்துக்கட்ட குணமாகும். இதைச் சமையல் செய்து உட்கொண்டால் மேற்கூறப்பட்ட நோய்களனைத்தும் குணமாகும்.
·
நொச்சி இலைகளை நீரிலிட்டு கொதிக்க வைத்து குடிநீராக்கி அதில், அடுப்பில் இட்டு நன்கு சிவக்க காய்ந்த செங்கல்லையிட்டு அதிலிருந்து வரும் ஆவியினை உடல் முழுமையும் மூடி, ஆசனவாயில் ஆவிபிடிக்க, எருவாயில் உள்ள முளையிலிருந்து நீர் கசிந்து நோய் நீங்கும். இம்முறையினை மேற்கொள்ளும் போது உணவில் புளி நீக்க வேண்டும்.
உணவு முறைகள் :
- கார் (சிவப்பு அரிசி), குருவை (கருப்பு அரிசி), ஜவ்வரிசி கஞ்சி,அத்தி, கோவை, வாழைப்பூ, வெள்ளரி,புடலை,பசலைக்கீரை, முருங்கைக்கீரை,வெந்தயக்கீரை, சுக்காங்கீரை , பீன்ஸ், அவரைக்காய்,வெண்டைக்காய் போன்ற நார்ச்சத்துகள் நிறைந்த காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
- கற்றாழை, மாதுளை,அத்திப்பழம் ஆகையவற்றை எடுத்துக் கொள்ளலாம் .
- இளநீர், பதநீர் , மோர் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளவும் .
- அசைவ உணவுகளில் கோழி இறைச்சி தவிர்த்துவிடுவது நல்லது. மீன் சாப்பிடலாம், அதிலும் விலாங்கு மீன் மூலத்தைக் குணப்படுத்தும்.
- ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை முழுமையாகத் தவிர்த்துவிடுவது நல்லது.
மூல நோயுள்ள பெரும்பாலானோர் மருந்துவர்களிடம் சென்று காண்பிக்க வெட்கப்பட்டு மருத்துவம் செய்யாமல் விட்டு விடுகிறார்கள். இன்னும் சிலரோ மூல நோயை அறுவை மருத்துவத்தால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்ற தவறான எண்ணத்துடன் அறுவை சிகிச்சை செய்ய பயந்து சிகிச்சை பெறாமலே துன்பப்பட்டுக் கொண்டு இருந்து விடுகிறார்கள். ஆரம்ப நிலையிலுள்ள மூலங்களை சித்த மருத்துவத்தாலேயே முற்றிலும் குணப்படுத்த இயலும். வேறு சிலர் இது மூல நோய் தானே என்று அலட்சியமாக கவனிக்காமல் விட்டு விடுவார்கள். சில சமயம் அது புற்று நோயாகவும் இருக்க/ மாற கூடும். ஆகவே உங்களுக்கு மலம் கழிக்கும் போது ரத்தம் வெளிவந்தாலோ, கைக்கு மூல முளை தென்பட்டாலோ, ஆசன வாயில் வலியோ, எரிச்சலோ இருந்தாலும் அருகிலுள்ள மருந்துவரை அணுகி முறையான சித்த மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.
"சித்த மருத்துவம் ஒரு வாழ்க்கை முறை"
உணவே மருந்து ;மருந்தே உணவு !!
- Dr. R. Rushmi Kruthiga (B.S.M.S)
Email:drrushmibsms2021@gmail.com
Popular Posts
PANCHAMUTTI KANJI - A Nutritional Porridge for Babies
- Get link
- X
- Other Apps
Ingi,Chukku, Kadukkai Karpam for Longevity
- Get link
- X
- Other Apps
Comments